நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்வதால் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து வைகை அணையில் இருந்து நேற்று 3,754 கன அடிநீர் திறக்கப் பட்டது. மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தென்மேற்குப் பருவமழை அடை மழையாக தென் மாவட்டங்களில் பெய்து கொண்டிருக்கிறது. பெரியாறு, வைகை அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது.
வைகை அணைக்கு பெரியாறு அணையில் இருந்து 1,800 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கும் நீர் வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் அணை நிரம்பியது. தற்போது நீர்மட்டத்தை 70 அடி அளவில் தக்கவைத்துக் கொண்டு அணைக்கு வரும் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்படியே திறந்துவிட்டுள்னர்.
நேற்று முன்தினம் வைகை அணையில் இருந்து 2,500 கன அடி நீர் மட்டும் திறந்து விடப்பட்டது. ஆனால், நேற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. சுருளி ஆறு, கொட்டகுடி ஆறு பகுதிகளில் இருந்து வைகை அணைக்கு 400 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அதனால், நேற்று காலை முதல் வைகை அணையில் இருந்து 3,754 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வைகை அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரை வைகை ஆற்றில் நேற்று இரவு வெள்ளமாகப் பாய்ந்து வந்தது. ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் யானைக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது.
மதுரை நகரில் முக்கியப் பாலங்கள் மற்றும் வைகை ஆற்றின் கரையோரங்களில் போலீஸார் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைப் ஏவி மேம்பாலத்தில் நின்றபடி மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். சிலர் செல்ஃபி எடுத்தும் மகிழ்கின்றனர்.
ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை
கிராமப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை உட்பட முக்கிய அறிவிப்புகளை தண்டோரா மூலம் அறிவிக்கும் நடைமுறை இனி தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மதுரை மாவட்டத்தில் வைகையாற்றின் கரையோர மக்களுக்கு நேற்று ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கிராமங்களில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த தண்டோரா போடும் முறை கைவிடப்பட்டுள்ளது.