சென்னை: கரோனா தொற்றால் மரணம் அடைந்த 379 முன்கள பணியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.95 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், காவல்துறை, அரசு, உள்ளாட்சி அமைப்பின் பணியாளர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி 8.5.2021 முதல் 30.06.2022 வரை மரணம் அடைந்த 379 முன்கள பணியாளர்களுக்கு 95 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 2 நீதிபதிகள், 94 காவல் துறையினர், 34 அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், பல துறைகளைச் சேர்ந்த 249 பணியாளர்கள் என்று மொத்தம் 379 பேருக்கு ரூ.95.55 கோடி தமிழக அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.