ஈரோடு ஜெயராமபுரத்தில் நடந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமரகுருபர சுவாமிகள், சாது சண்முக அடிகளார் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர். உடன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. 
தமிழகம்

ஈரோடு | பாடப்புத்தகங்களில் தீரன் சின்னமலை வரலாறு: ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஈரோடு: ஆங்கிலேயரை தோற்கடித்த தீரன் சின்னமலையின் ஆளுமை குறித்து பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

கொங்கு சமூக ஆன்மிக கல்விகலாச்சார அறக்கட்டளை, தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில், ஈரோடு மாவட்டம் ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217-வது நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராக விளங்கிய தீரன் சின்னமலையின் வரலாற்றை அழிக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தனர். ஆனால், அவரின் வரலாறும், தியாகமும் இங்குள்ள மக்களின் இதயங்களில் எழுதப்பட்டுள்ளது.

பலம் வாய்ந்த ஆங்கிலேய ராணுவத்தை, தனது போர்த்திறனால், தீரன் சின்னமலை தோற்கடித்தார். அவரது தலைமைப் பண்பு குறித்து பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும். உலகின் பழமையான மொழி தமிழ் மொழி. பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.

துரதிஷ்டவசமாக நமது வரலாற்றில் திரிபுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இறுதியில் உண்மை வெல்லும். சிலப்பதிகாரத்தில் பாரதம் குறித்தும், இந்து தர்மம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தைப் போலவே, இத்தகைய விலைமதிப்பற்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துகளை அழிக்க முடியாது.

உலகளாவிய சகோதரத்துவத்தைத்தான், சனாதனம், கலாச்சாரம், தர்மம் என்று சொல்கிறோம். ஒரே கடவுள் தன்னை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கொள்கிறார். எனவே, நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். இதுதான் இந்த தர்மத்தின் சாராம்சம்.

கரோனா தொற்று காலம் உட்பட, அனைத்து நேரங்களிலும், உதவி தேவைப்படும் நாடுகளுக்கெல்லாம் உதவும் நாடாக இந்தியா மட்டுமே உள்ளது. தன்னைப்போலவே, பிறரையும் நினைக்கும் தர்மம் இந்தியாவிடம் மட்டுமே உள்ளது. இந்தியா உலகின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது, உலகமே நமது குடும்பமாக மாறும். அடுத்த 25 ஆண்டுகளில், உலகின் தலைவராக இந்தியா மாறி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமரகுருபர சுவாமிகள், சாது சண்முக அடிகளார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜெ.சின்னமலை கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT