கோத்தகிரி: இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை (குயின்ஸ் கனோபி) விருது வழங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் கோத்தகிரி லாங்வுட் சோலை புகழ்மிக்க ஒன்றாக மாறியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள லாங்வுட் சோலை சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் உள்ள அற்புதமான பசுமை மாறாக் காடு ஆகும். சுமார் 25 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதுடன் பல்லுயிர்ச் சூழல் மையமாகவும் உள்ளது.
உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடாக அறிவிக்கப்பட்டு, காமன்வெல்த் நாடுகளின் ‘குயின்ஸ் கனோபி’ என்ற இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை அங்கீகாரம் கோத்தகிரி லாங்வுட் சோலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு உலகளாவிய அங்கீகாரம் ஆகும்.
‘குயின் காமன்வெல்த் கனோபி’ என்ற பெயரில் ராயல் காமன்வெல்த் சொஸைட்டி என்ற அமைப்பின் மூலம் இந்த விருது வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு, லண்டனில் உள்ள ராயல் காமன்வெல்த் சொஸைட்டியின் தலைமை நிர்வாகி டாக்டர் லிண்டாவிடமிருந்து தமிழக வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லாங்வுட் சோலை பாதுகாப்புக் குழுவின் செயலர் கே.ஜே.ராஜு கூறியதாவது: லாங்வுட் சோலை கண்காணிப்புக் குழு கடந்த 25 ஆண்டுகளாக வனத் துறையுடன் இணைந்து இந்த காட்டைப் பாதுகாத்து வருகிறது. மேலும் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை முகாம்களை நடத்தி சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி லாங்வுட் சோலை பகுதியை ஒரு சுற்றுச் சூழல் கல்வி மையமாக மாற்றியுள்ளது.
இந்த உலக அளவிலான அங்கீகாரம் பாதுகாப்புக் குழுவினரின் அர்ப்பணிப்புக்கும், தியாகத்துக்கும் கிடைத்த பரிசு. இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறும்போது, “சுற்றுச் சூழல் துறையில் லாங்வுட் சோலைக்கு பாதுகாக்கப்பட வேண்டிய சதுப்பு நிலம் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு லாங்வுட் சோலையை உலக அளவில் பல்லுயிர்ச் சூழல் மையமாக மாற்றுவதற்கு ரூ.5.20 கோடி ஒதுக்கியுள்ளது” என்றார்.
உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடுகளில் ஒன்றாக லாங்வுட் சோலை அறிவிக்கப்பட்டிருப்பது இயற்கை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.