தமிழகம்

சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் 2-ம் நாளாக சோதனை

செய்திப்பிரிவு

சென்னை/மதுரை: சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரை காமராசர்புரம் பகுதியைசேர்ந்தவர் அன்புச்செழியன். அதிமுக பிரமுகரான இவர், சினிமா ஃபைனான்சியர், ஹோட்டல், திரையரங்கு உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.

இவர் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் வந்ததை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அவருக்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பல முக்கிய ஆவணங்களின் அடிப்படையில், நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்ந்தது.

குறிப்பாக அன்புச்செழியனிடம் பணம் பெற்று படத் தயாரிப்பில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. தயாரிப்பாளர்கள் அன்புச்செழியனிடம் பெற்ற பணம் எவ்வளவு, அந்த பணம் மூலம் எடுத்த திரைப்படங்களில் ஈட்டிய லாபம் எவ்வளவு என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரிக்க வருமான வரித்துறை இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியனின் சகோதரரான அழகர் சாமி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அவரது வீட்டில் கைரேகை மற்றும் விழித்திரை மூலம் திறக்கப்படும் லாக்கர் ஒன்று இருந்த நிலையில், அவர் வெளியூரில் இருந்ததால் லாக்கர் திறக்கப்படவில்லை.

வீட்டு லாக்கர் திறப்பு

இந்நிலையில், நேற்று அவர் வந்த பிறகு லாக்கரை திறந்து அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்தனர். அதில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை காமராசர் சாலை, கீரைத்துறை பகுதியிலுள்ள அன்புச்செழியனின் வீடுகள், செல்லூரிலுள்ள கோபுரம் திரையரங்கு, தெற்குமாசி வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்றும் சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத பணம், நகைகள் மற்றும் சில ஆவணங்களின் விவரங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT