சேலம் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் கனஅடி நீர் வரத்து இருந்தது. இதையடுத்து, நீர் வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஎஸ்ஆர், கபினி அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு, விநாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்துநேற்று மாலை ஒரு லட்சத்து 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
அணையின் 16 கண் மதகு வழியாக விநாடிக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரம் கனஅடியும், நீர் மின் நிலையங்கள் மதகு வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி என மொத்தம் அணையில் இருந்து விநாடிக்கு ஒருலட்சத்து 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 120.12 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.62 டிஎம்சி-யாக உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் விநாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுஉள்ளதால், தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், நீர் திறப்பு எந்நேரமும் அதிகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக்கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி நீர் வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர் வரத்து அதிகரித்தால், வெள்ள நீர் போக்கி மதகுகளை உயர்த்தும் பணிக்கு ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளளனர்.
ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை 8 மணியளவில் விநாடிக்கு 1.35 லட்சம் கனஅடி நீர் வரத்து இருந்தது.
2 லட்சம் கனஅடி
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், நள்ளிரவுக்குள் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1.75 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்புள்ளது. அதனால் அதே அளவு தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் இன்று நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சம் கனஅடியை தாண்டக்கூடும் என மத்திய ஜல்சக்தித் துறை தெரிவித்துள்ளது.