தமிழகம்

செய்யாறு அருகே பேருந்து மோதி 3 இளைஞர்கள் பலி

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த குண்ணவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் வெங்கடேசன்(17). ஐடிஐ படித்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் தினகரன்(18) செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டும், சொக்கலிங்கம் மகன் விக்னேஷ்(17) அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.

நண்பர்களான இந்த 3 பேரும் நேற்று முன்தினம் இரவு ஓரே இருசக்கர வாகனத்தில் இருமந்தாங்கல் கிராமத்துக்குச் சென்று பட்டாசு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

காஞ்சிபுரம்- செய்யாறு சாலையில் உள்ள சோழவரம் கிராமத்தில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது செய்யாறு நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது.

இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அரசுப் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும், 108 ஆம் புலன்ஸ் தாமதமாக வந்ததாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ஆம்புலன்ஸ் தாமதமாக வந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் முடிவுக்கு வந்தது.

அரியலூர் அருகே 3 பேர் பலி

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன்(34), இவரது மனைவி சந்தோஷி(29), மகன் அட்சத்(5). இவர்களது உறவினர் சேலையூரைச் சேர்ந்த அரவிந்த்(30), அவரது மனைவி சரண்யா(25), அவர்களது ஒன்றரை வயது மகன் சஷ்வத். இவர்கள் 6 பேரும், ஒரு காரில் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு புறப்பட்டனர். காரை முரளிகிருஷ்ணன் ஓட்டினார்.

அரியலூர் மாவட்டம் காடுவெட்டியை அடுத்த பாப்பாக்குடி அருகே நேற்று அதிகாலை சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த முரளி கிருஷ்ணனின் மனைவி சந்தோஷி, உறவினர் அரவிந்த், அவரது ஒன்றரை வயது குழந்தை சஷ்வத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த முரளிகிருஷ்ணன், சரண்யா, அட்சத் ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT