சென்னை: நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில், மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் தேசியக் கொடியை ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசியக் கொடி விற்பனை அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அஞ்சலக அதிகாரி என்.பிரகாஷ் கூறியதாவது:
சில்க் துணியால் தயாரிக்கப்பட்டுள்ள இக்கொடி 20 இன்ச் உயரமும், 30 இன்ச் அகலமும் கொண்டது. ஒரு கொடியின் விலை ரூ.25. அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இக்கொடி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு மொத்தமாகவும் கொடிகள் விற்பனை செய்யப்படும்.
மேலும், www.indiapost.gov என்ற இணையதளத்தில் உள்ள இ-போர்டல் மூலம் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்தும் தேசியக் கொடியை வாங்கலாம். ஆனால், ஒருவருக்கு அதிகபட்சமாக 5 கொடிகள் மட்டுமே வழங்கப்படும். விற்பனை வரும் 13-ம் தேதி வரை நடைபெறும்.