சென்னை: மூளைக்கு செல்லும் ரத்தநாளங்களில் அடைப்புகள் இருந்த 93 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்து அப்போலோ மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை அப்போலோ மருத்துவமனை ரத்தநாளம் மற்றும் எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பாலாஜி கூறியதாவது:
சென்னையை சேர்ந்த 93 வயது முதியவருக்கு மூளைக்கு செல்லும் 4 ரத்தநாளங்களில் 99 சதவீத அடைப்புகள் இருந்தன. இதனால், தலைசுற்றல், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். மூளைக்குரத்தம் செல்வது குறைந்திருந்ததால், பக்கவாதம் ஏற்படும் அபாயமும் இருந்தது.
நலமுடன் உள்ளார்
எனவே, அவரது வலது கரோடிக்தமனியில் உள்ள அடைப்பை அகற்றுவதன் மூலமாக, பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். இதனால், ‘கரோடிக் எண்டார்டெரெக்டோமி’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்த பகுதிக்கு மட்டுமே, மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.
பின்னர், நோயாளி விழிப்புடன் இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்து அடைப்புகள் சரி செய்யப்பட்டன. அவர் விழிப்புடன் இருந்ததால், அவரிடம் பேசுவதன் மூலமாக மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்ய முடிந்தது. சிகிச்சைக்குப் பின் அவர் நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போலோ மருத்துவமனைகள் குழும நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி கூறும்போது, “டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கையாள்வதில் அப்போலோ மருத்துவமனைகள் முன்னிலையில் உள்ளது.
24 மணி நேரமும் சிறப்பு நிபுணர்கள் குழுவினர், பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். 93 வயதான நோயாளி விரைவாக குணமடைந்துள்ளார். இதற்கு மருத்துவ குழுவினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.