செந்தில்குமார் 
தமிழகம்

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டமுக்கியப் பிரமுகர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவையும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 10-ம் தேதிபிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முபங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நேரு உள்விளையாட்டு அரங்கம் தொடர்ந்து போலீஸாரின் பாதுகாப்பின்கீழ் உள்ளது.100-க்கும் மேற்பட்ட போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். இப்பணியில் மதுரை மாவட்டம் செல்லூர்சுயராஜ்யபுரத்தை சேர்ந்த செந்தில்குமார்(31) என்ற ஆயுதப்படை காவலரும் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம்கழிப்பறைக்கு சென்ற செந்தில்குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். இதில் அவரது வலதுபுற மார்பில் குண்டு பாய்ந்தது.

உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கமாண்டர் ராமமூர்த்தி, கழிப்பறை கதவைஉடைத்து உள்ளே சென்று உயிருக்குப் போராடிய செந்தில்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செந்தில்குமார் இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

தற்கொலை காரணம்

இச்சம்பவம் குறித்து பெரியமேடு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவலர் செந்தில் குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

செந்தில்குமார் 2011-ம் ஆண்டுகாவல் துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு திருமணமாகி உமாதேவி என்ற மனைவியும், பிரசன்னா என்ற ஒரு வயது மகனும் உள்ளனர்.

உமாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றுகிறார். செந்தில்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதே நேரத்தில் செந்தில்குமாருக்கு தொடர்ந்து நேரு விளையாட்டு அரங்கத்தில் பாதுகாப்புப் பணி அளிக்கப்பட்டதால் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

SCROLL FOR NEXT