சிவகங்கையில் காவலர்களுக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளின் தரம் குறித்த சந்தேகம் இருப்பதால், அவற்றை வாங்க போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் 63 வீடுகள் விற்கப்படாமலும், 61 வீடுகள் கட்டப்படாமலும் உள்ளன.
சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகம் சார்பில் போலீஸாருக்கு ‘உங்கள் சொந்தம் இல்லம்’ திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மொத்தம் ரூ.44 கோடியில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.களுக்கு 40 வீடுகள், போலீ ஸாருக்கு 161 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதில் முதற்கட்டமாக இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.களுக்கு 17 வீடுகள் உட்பட 140 வீடுகள் கட்டப்பட்டு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.களுக்கு 1,292 சதுர அடி மனையிடமும், அதில் 854 சதுர அடியில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடும் கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டுக்கு ரூ.25.99 லட்சம் செலுத்த வேண்டும்.
அதேபோல் போலீஸாருக்கு 1,162 சதுர அடி மனையிடமும், அதில் 656 சதுர அடியில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடும் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ரூ.21 லட்சம் செலுத்த வேண்டும். வீடுகள் கட்டும் பணி 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. கடந்த 2020 ஏப்ரலில் முடிந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது தான் முடியும் தருவாயில் உள்ளது.
மேலும் கட்டுமானத் தரம் குறித்த சந்தேகம் இருப்பதால், அந்த வீடுகளை வாங்க போலீஸார் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் 63 வீடுகள் விற்கப்படாமலும், 61 வீடுகள் கட்டப்படாமலும் உள்ளன.
இதுகுறித்து காவலர் வீட்டு வசதிக்கழக அதிகாரிகள் கூறிய தாவது: வீடுகள் தரமாகக் கட்டப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் பணியாளர்கள் வரவில்லை. கட்டுமானப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு இருந்ததால், கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது. படிப்படியாக போலீஸார் வீடுகளை வாங்க பதிவு செய்து வருகின்றனர். பதிவு செய்த 63 வீடுகளும் விரைவில் விற்கப்படும் என்றனர்.