ராணுவத்தில் வீர மரணம் அடைந்த பண்ருட்டி ராணுவ வீரர் சௌகத் அலி மனைவி மும்தாஜ் பேகத்திடம், பிரதமர் வழங்கிய பதக்கத்தை, 6 தமிழ்நாடு படை பிரிவு கமாண்டிங் ஆபிஸர் கர்ணல் விஜய்குமார்‌ அளித்தார். 
தமிழகம்

ராணுவத்தில் வீர மரணம் அடைந்த பண்ருட்டி ராணுவ வீரர் குடும்பத்தினரிடம் பிரதமர் வழங்கிய பதக்கம் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

ராணுவத்தில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சௌகத் அலி குடும்பத்தாருக்கு பதக்கம் வழங்கும் விழா பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பண்ருட்டியைச் சேர்ந்த வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சௌகத் அலிக்கு வீர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இவர், கடந்த 02.02.2001 அன்று ஜம்மு காஷ்மீரில் நடந்த எல்லைச் சண்டையில் உயிரிழந்தார்.

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில் ராணுவ வீரர் சௌகத் அலியின் மனைவி மும்தாஜ் பேகத்திடம் 6 தமிழ்நாடு படை பிரிவு கமாண்டிங் ஆபிஸர் கர்ணல் விஜய் குமார்‌ பதக்கத்தை வழங்கினார்.

முன்னதாக ராணுவ வீரரின் படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பூவராக மூர்த்தி, தேசிய மாணவர் படை அலுவலர் ராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் தியாகராஜன், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் லோகநாதன், பள்ளி கல்வி வளர்ச்சி குழு பழனி மற்றும் பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதுகலை ஆசிரியர் தென்றல் அரசன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT