அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம் 
தமிழகம்

“அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துக” - அன்புமணி

செய்திப்பிரிவு

சென்னை: “அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அதனால், குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்களில் பணியாற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் உயர்கல்வித் துறைக்கு இது தொடர்பாக கோரிக்கை விடுத்தும் அது ஏற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் நிர்வாகக் காரணம் என்று கூறி பணியிட மாற்றங்கள் வழங்கப்படுகின்றன. அதனால் தகுதியானவர்களுக்கு இட மாறுதல் கிடைப்பதில்லை.

தகுதியானவர்களுக்கு, நியாயமான, சட்டப்பூர்வ வழியில் இட மாறுதல் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகும். இதில் எந்த முறைகேடுகளும் நடப்பதில்லை. பள்ளிக் கல்வித் துறையில் இந்த முறையில் முறையாக இடமாறுதல் வழங்கப்படுகிறது.

அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் மூலம் தகுதியும், தேவையும் உள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT