தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு சுகாதார நிலையங்களையும் ஆய்வு செய்து அங்குள்ள பற்றாக்குறைகளை தமிழக அரசு உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் நீண்டகாலமாக போதுமான அளவில் பணியில் அமர்த்தப்படாத நிலை உள்ளது. இதனால் இந்த மருத்துவமனைகளுக்கு அன்றாடம் வரும் சாதாரண பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் தான், அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்து வசதி பெறும் சூழல் உள்ளது.
குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 140 சுகாதார மையங்களில் பெரும்பாலான இடங்களில் மருத்துவர் மற்றும் மருத்துவ வசதிகள் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் முக்கியமாக காலரா போன்ற தொற்று நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமனைகளில் இரவு, பகல் என தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியது கட்டாயம். அத்தகைய வசதிகள் போதுமான அளவில் இல்லாததை சுகாதாரத்துறை கவனத்தில் கொண்டு முழு நேர சிகிச்சைக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே இத்தகையை நிலை இருப்பதால் தமிழக சுகாதரத்துறை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு சுகாதார நிலையங்களையும் ஆய்வு செய்து அங்குள்ள பற்றாக்குறைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். தற்போதுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழகத்தில் வரும் காலம் மழைக்காலம் என்பதால் நோய் வருவதை தடுக்கவும், நோய் தீர்க்கும் பாதுகாப்பு முறைக்கும் 24 மணி நேர மருத்துவ வசதிகள் அவசியம் இருப்பது இன்றியமையாதது.
எனவே, தமிழகம் முழுவதும் நகரம் முதல் கிராமம் வரையுள்ள அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு, மலேரியா, காலரா, வைரஸ், மர்மக் காய்ச்சல் போன்றவற்றை ஆரம்ப காலக்கட்டத்திலேயே கண்டறியவும், வருமுன் காக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மருத்துவ முகாம்கள் அமைக்கவும் போதுமான அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அவசியம் தேவை.
இவர்களை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மற்றும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளில் முழுமையாக பூர்த்தி செய்து பொது மக்களுக்கான சேவையை தடங்கலின்றி செய்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.