தமிழகம்

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் உள் நோக்கம் கொண்டது: பழ.நெடுமாறன்

செய்திப்பிரிவு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தானே கூட்டப் போவதாக திமுக அறிவித்திருப்பது தேவையற்றது மட்டுமல்ல, அரசியல் ஆதாயம் தேடும் உள் நோக்கம் கொண்டது என்று தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''2015-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் நாள் அன்று தமிழக சட்டமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்குமாறும், மேகதாது அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறும் மத்திய அரசை வற்புறுத்தும் தீர்மானம் ஆளுங்கட்சியான அதிமுகவால் கொண்டு வரப்பட்டு திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டவாறு திமுக உட்பட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத் துணை அவைத் தலைவர் தம்பிதுரை தலைமையில் 2015 மார்ச் 29-ஆம் நாள் பிரதமர் மோடியைச் சந்தித்து இத்தீர்மானத்தை வற்புறுத்தியுள்ளனர்.

அதற்கிணங்க பிரதமர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்புப் பெறப்பட்டது.

அதற்கு எதிராக மத்திய அரசு அளித்துள்ள மனுவின் மீதான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளிக்கவிருக்கிறது.அந்தத் தீர்ப்பு வெளிவந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்துச் சிந்திக்க முடியும். ஆனால் அதற்குள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தானே கூட்டப் போவதாக திமுக அறிவித்திருப்பது தேவையற்றது மட்டுமல்ல அரசியல் ஆதாயம் தேடும் உள் நோக்கம் கொண்டதாகும்.

அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய காலக்கட்டத்தில் அதைக் கெடுக்கும் வகையில் யாரும் செயல்படக் கூடாது'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT