தமிழகம்

சென்னை கிழக்கு தாம்பரத்தில் மூளைக் காய்ச்சலால் திடீர் மரணம்: மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

செய்திப்பிரிவு

தாம்பரத்தில் மூளைச் காய்ச்சலால் உயிரிழந்த 9-ம் வகுப்பு மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

தாம்பரம் கிழக்கு பகுதி கிளப்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமா. மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் ஐஸ்வர்யா (13) அருகே உள்ள சங்கரா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17-ம் தேதி திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார். காலை 10 மணியளவில் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார். உடனே பள்ளி நிர்வாகம் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கம் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஐஸ்வர்யா சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டதாகவும், நரம்பு மண்டலத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய் வெடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் பிழைப்பது கடினம் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடந்த அறுவைசிகிச்சை தோல்வியில் முடிந்தது. பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தாயும் உறவினர் களும் முடிவு செய்தனர். இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவியின் கண், சிறுநீரகம், இதயம், நுரையீரல் தானம் செய்யப் பட்டது.

இதுகுறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோர் கூறுகையில், “சிறிய வயதிலேயே எங்கள் மகளை இழந்தது வேதனையாக உள்ளது. அவளது உடல் உறுப்புகள் மற்றவர்களை வாழ வைக்கும் என்று மருத்துவர்கள் கூறியதால் எங்களது மகளின் கண், சிறுநீரகம், இதயம், நுரையீரல் போன்றவற்றை தானமாகக் கொடுக்க முடிவு செய்தோம். மகளின் உடல் உறுப்புகளால் பலர் மறுவாழ்வு பெறுவார்கள். எங்கள் மகள் பலரை வாழ வைத்துள்ளதை நினைத்து பெருமையடைகிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT