விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பஸ்ஸில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த முகமதுரபீக் என்பவரை, 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த காந்தாரி என்பவரது இளைய மகன் கருப்பசாமி (24). திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கோவையில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கருப்பசாமி, தசரா விடுமுறைக்காக கோவில்பட்டி வந்தார். விடுமுறை முடிந்து, கடந்த 12-ம் தேதி கோவை செல்ல பஸ்ஸில் பயணித்தார். சாத்தூர் படந்தால் அருகே வந்தபோது மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கருப்பசாமி இறந்தார்.
போலீஸாரின் தீவிர விசாரணையில் கோவில்பட்டியைச் சேர்ந்த சி.டி. கடை உரிமையாளரான முகமது ரபீக் என்பரது இளைய மகன் அப்துல்லாவை கருப்பசாமியின் அண்ணன்கள் மந்திரமூர்த்தியும், கனகராஜும் கொலை செய்ததற்கு பழி வாங்க கருப்பசாமி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, முகமதுரபீக்கை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி மதுரை நீதிமன்றத்தில் முகமதுரபீக் சரணடைந்தார். அவரை 17-ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்கவும், அன்றைய தினம் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதையடுத்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமதுரபீக், சாத்தூர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நகர் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் கீதா, முகமது ரபீக்கை 4 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும், அக். 21-ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் அவரை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சரணடைந்த முகமதுரபீக் மனைவி பானுவின் தோழிகளான லதா, மகாலட்சுமி உள்ளிட்ட 3 பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் உள்ள குளத்தில் வீசி எறிந்ததாக கிடைத்த தகவலையடுத்து, குறிப்பிட்ட பகுதியில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குளத்தில் 4 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றி, அதன்பின் துப்பாக்கியை தேடும் பணி நடைபெற்று வருகிறது.