புதுக்கோட்டை: புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்து தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றபோது, தேர் முன்புறமாக சாய்ந்ததில், 8 பக்தர்கள் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து, தேருக்கு கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்த ஜி.ராஜேந்திரன், பி.வைரவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று புதுக்கோட்டை வந்து விபத்துக்குள்ளான தேரை ஆய்வு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தார்.அப்போது, தேரோட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சக்கரத்தின் அடியில் திடீரென மரக்கட்டையை வைத்து தடுத்ததால் குப்புறசாய்ந்துவிட்டது என தெரிவித்தனர்.
முதல்வர் நிவாரணம்
அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, தேர் விபத்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 8 பேருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 பேரிடம் காசோலையை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.