தமிழகம்

அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் ஊதியத்தை 28-ம் தேதியே வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை, அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு தடுமாற்றத்தில் உள்ளன என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை முன்கூட்டியே வழங்குவதில் நிகழ்ந்த குழப்பங்கள் தான். தீபாவளி திருநாளையொட்டி அரசு ஊழியர்களுக்கான அக்டோபர் மாத ஊதியம் 28-ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசு, சிறிது நேரத்தில் அதை திரும்பப்பெற்றது கண்டிக்கத்தக்கது.

நடப்பாண்டிற்கான தீபாவளி திருநாள் இம்மாத இறுதியில் 29-ஆம் தேதி வருவதால், அதைக் கொண்டாட வசதியாக இம்மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் அமைப்புகள் பலவும் கோரிக்கை விடுத்திருந்தன.

புதுச்சேரியில் தீபாவளி திருநாளையொட்டி நேற்றே ஊதியம் வழங்கப்பட்டதால் தமிழக அரசு ஊழியர்களிடையே இக்கோரிக்கை தீவிரமடைந்தது. இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த தமிழக அரசு, அதன் ஊழியர்கள் அனைவருக்கும் அக்டோபர் மாத ஊதியம் நாளை மறுநாள் 28-ஆம் தேதி வழங்கப்படும் என செவ்வாய்க்கிழமை மாலை ஆணை பிறப்பித்தது.

இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் அந்த அரசாணையை ரத்து செய்த அரசு, ஊழியர்களுக்கு நாளை மறுநாள் ஊதியம் வழங்கப்படாது; வழக்கம் போல மாதக் கடைசி நாளான 31-ஆம் தேதி தான் ஊதியம் வழங்கப்படும் என்று புதிய அரசாணையை வெளியிட்டது.

தமிழக அரசின் இந்தக் குளறுபடியால் அரசு பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு ஊதியம் ஈட்டினாலும், மாதத்தின் கடைசி வாரத்தை கடன் வாங்கி கழிப்பது தான் தமிழக அமைப்பு சார்ந்த பணியாளர்களில் பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தான் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதத்திற்கு இருமுறை ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம்.

தீபாவளி திருநாளுக்கு புத்தாடை எடுத்தல், பட்டாசுகள் மற்றும் இனிப்பு வாங்குதல் மற்றும் பிற செலவுகளுக்காக கூடுதல் பணம் தேவைப்படும் என்பதால் தான் முன்கூட்டியே ஊதியம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, திடீரென பின்வாங்கியது ஏன் என்பது மர்மமாகவே உள்ளது. எது எப்படி இருந்தாலும் தமிழக அரசின் இந்த அணுகுமுறை எந்த வகையிலும் நல்லதல்ல.

ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தவறானதோ, நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றதோ இல்லை. அண்டை மாநிலமான புதுச்சேரியில் அக்டோபர் ஊதியம் கடந்த 25-ஆம் தேதி வழங்கப்பட்டுவிட்டது. அவ்வாறு இருக்கும் போது தமிழகத்தில் இது ஏன் சாத்தியமில்லை என்பது தெரியவில்லை.

ஒருவேளை சாத்தியமற்றதாக இருந்தால் கூட அதை சாத்தியமாக்குவது தான் நிர்வாகத்தின் பணியாக இருக்க வேண்டுமே தவிர, அறிவித்ததை திரும்பப்பெறுவது அழகல்ல.

இத்தனைக்கும் இதில் பெரிய சலுகை எதுவும் இல்லை. வழக்கத்தை விட ஒரே ஒரு வேலை நாள் முன்கூட்டியே ஊதியம் வழங்கினால் போதுமானது. ஒருவேளை தீபாவளி திருநாள் இம்மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப்பட்டால் அதற்கு முந்தைய வேளைநாளான 28-ஆம் தேதியே ஊதியம் வழங்கப்பட்டு இருக்கும்.

அதேபோல், இப்போதும் ஊதியம் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும், ஊதியம் வழங்கப்படாததற்கு அரசு ஊழியர்கள் மீது ஆட்சியாளர்களுக்கு உள்ள வெறுப்பு தான் காரணமாகும்.

ஊதியத்தை முன்கூட்டியே வழங்குவதில் மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும் தொழிலாளர் விரோத போக்கைத் தான் தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, நிலுவைத் தொகை ஒரே தவணையில் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, மத்திய அரசு ஊழியருக்கு கடந்த ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படாதது செய்யாத தவறுக்கு கிடைத்த இரட்டை தண்டனையாகும்.

எனவே, அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான அக்டோபர் ஊதியத்தை நாளை மறுநாள் (28-ம் தேதி) வழங்க அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை, அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT