மடிப்பாக்கம் பகுதி பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நகராட்சிநிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத் தார். உடன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

மடிப்பாக்கத்தில் ரூ.249 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்: பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் ரூ.249 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை மாநகராட்சி 2011-ம் ஆண்டுக்கு முன்பு 174சதுர கிமீ பரப்பளவில் இருந்தது. அதன் பின்னர் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டபகுதிகளைச் சேர்ந்த 44 உள்ளாட்சிகள் மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டு 426 சதுரகிமீ பரப்பளவில் விரிவாக்கப்பட்டது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சில இடங்களில் இதுவரை குடிநீர், பாதாள சாக்கடை திட்ட வசதிகள் கொண்டுவரப்படவில்லை.

இந்நிலையில் மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட 187, 188 ஆகிய இரு வார்டுகளில் இடம்பெற்றுள்ள மடிப்பாக்கம் பகுதியில் ரூ.249 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் தொடக்க விழா மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றுநடைபெற்றது. அதில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து பேசியதாவது:

நாட்டிலேயே தமிழகத்தில்தான் 50 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அதனால் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். அவர் மாநகராட்சி மேயராகவும், உள்ளாட்சித் துறைஅமைச்சராகவும் இருந்ததால், சென்னையைப் பற்றி அனைத்தையும் அறிந்து வைத்துள்ளார்.

அவர் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு ஆலோசனைகளை தொடர்ந்து எங்களுக்கு வழங்கி வருகிறார். மடிப்பாக்கத்தில் ரூ.249 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இப்பணிகள் 30 மாதங்களில் முடியும். இப்பகுதிகள் இடம்பெற்றுள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில் பாதாளசாக்கடை திட்டம் மட்டுமல்லாது, 366 இடங்களில் 900கழிப்பறைகள் கட்டப்பட்டுவருகின்றன. மழைநீர்வடிகால்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பேசியதாவது: மாநகராட்சியின் பிரதானபகுதியில் உள்ள மழைநீர் வடிகால், பாதாள சாக்கடைதிட்டம், குடிநீர் விநியோகம் போன்ற வசதிகளை, விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.3 ஆயிரத்து 830 கோடி நிதியை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஒதுக்கினார்.

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக, ஆண்டுதோறும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கியதாக கூறியது. ஆனால், பணிகள் எதுவும் நடைபெறாததால், இப்பகுதிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான பாதாள சாக்கடை திட்டம் போன்றவை வரவில்லை. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ளதொகுதிகளிலேயே ரூ.1000 கோடிக்கு மேல் பல்வேறு துறைகள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் ஒரே தொகுதிசோழிங்கநல்லூர்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் கிர்லோஷ்குமார், ரமேஷ் அரவிந்த் எம்எல்ஏஉள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழகத்திலேயே ரூ.1000 கோடிக்கு மேல் பணிகள் மேற்கொள்ளப்படும் ஒரே தொகுதி சோழிங்க நல்லூர்தான்.

SCROLL FOR NEXT