திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். 
தமிழகம்

திருத்தணி, உத்திரமேரூர், திருக்கழுகுன்றத்தில் ஆடிப்பூர விழா: காவடி, பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள்

செய்திப்பிரிவு

உத்திரமேரூர்: திருத்தணி முருகன் கோயில் உத்திரமேரூர் துர்கை அம்மன் கோயில், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் சுமந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருத்தணி கோயிலில் நடந்து வரும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நேற்று காலையில் பக்தர்கள் அலகு குத்தியும், மயில், மலர் காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக் கடன் செலுத்தினர். உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பாலாபிஷேகம் நடந்தது.

அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்கக் கீரிடம், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டனர்.

உத்திரமேரூர்

உத்திரமேரூரில் பழமையான கோயிலான வடவாயில் செல்வி துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு 501 பெண் பக்தர்கள் விரதமிருந்து பால் குடம் எடுத்தனர். பின்னர் ஊர்வலமாகச் சென்று கோயில் கருவறையில் தங்கள் கைகளாலே மூலவருக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதை முன்னிட்டு கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கழுகுன்றம்

திருக்கழுகுன்றம் நகரில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆடிப்பூரம் உற்சவம் கடந்த 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆடிப்பூர உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில், அஸ்திரதேவர் சிறப்பு அலங்காரத்துடன் சங்கு தீர்த்த குளத்தில் இறங்கி புனித நீராடினார். பின்னர், மாலையில் திரிபுர சுந்தரி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், முக்கிய வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.

SCROLL FOR NEXT