சென்னை விஐடி சட்டப் பள்ளியில் நடைபெற்ற தேசிய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுடன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ். போபால் தேசிய சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.விஜயகுமார், விஐடி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி.விஸ்வநாதன், விஐடி சட்டப் பள்ளியின் முதல்வர் எம்.எஸ்.சவுந்தரபாண்டியன். 
தமிழகம்

சென்னை விஐடி சட்டப் பள்ளியில் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விஐடி சட்டப் பள்ளியில் நிறுவன சட்டம் தொடர்பான தேசிய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டி (VITSOL) ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

போட்டியின் முதல்நாளில் விஐடி சென்னை வளாக இணை துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் மற்றும் விஐடி சட்டப் பள்ளியின் முதல்வர் எம்.எஸ்.சவுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார்.

நீதியரசர் தனது உரையின்போது, இளம் வழக்கறிஞர்கள் கற்பனைத் திறன் உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும், புகழ்பெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிவுறுத்தினார்.

போட்டியின் 2-வது நாளில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முதன்மை விருந்தினராகவும், போபால் தேசிய சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.விஜயகுமார் கவுரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர். இவர்களுடன் இந்திய போட்டிகள் ஆணையத்தின் மண்டல இயக்குநர் ராஜ் வேங்கடசாமியும் சேர்ந்து போட்டியின் இறுதிச் சுற்றில் நீதிபதிகளாக அமர்ந்து சிறந்த போட்டியாளர்களைத் தேர்வு செய்தனர்.

நிறைவு விழாவில் விஐடி பல்கலை. நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை வகித்து உரையாற்றும்போது, மக்களுக்கு நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் அதனால் விளையும் வீண் பண விரையம் ஆகியவற்றை தவிர்ப்பதில் திறமையானவர்களாக இருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

விஐடி சென்னை வளாக இணை துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் கே.பி.மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து 35 அணிகள் பங்கேற்றன. ஹரியாணாவில் அமைந்துள்ள ஓ.பி.ஜிண்டால் குளோபல் சட்டக் கல்லூரி அணி முதல் வெற்றியாளராகவும், பெங்களூரில் அமைந்துள்ள கிரைஸ்ட் பல்கலைக்கழக சட்டக் கல்லூரி அணி 2-வது வெற்றியாளராகவும் தேர்வாகின.

SCROLL FOR NEXT