தமிழகம்

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் தொடங்கியது

செய்திப்பிரிவு

சின்னசேலம் அருகே கனியாமூரில் வன்முறைக்குள்ளான தனியார்பள்ளியில் பயின்ற மாணவர்க ளுக்கு பாட வகுப்புகள் தடைபட்டிருந்த நிலையில், 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கின.

சின்னசேலம் கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த சம்பவத்தால், அப்பள்ளியில் வன்முறை வெடித்தது. பள்ளிவளாகம் முழுவதும் வன்முறையாளர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதில் பள்ளி வகுப்புகள் தீக்கிரையாயின.

மேஜை நாற்காலிகள்திருடு போனதோடு, பல பொருட்கள் தீக்கிரை யாக்கப்பட்டன. மாணவர்களின் சான்றிதழ்கள், புத்தகங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. மாணவி உயிரிழந்த மறுநாள் முதல் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மாணவர் களின் கல்வி பாதிக்காத வகையில்மாற்று ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது. மாணவர்களுக்கு கல்வி தொடர்ந்து கிடைத்திட ஆத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் ராஜூ சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு, அதற்கான பணிகளை செய்து வருகிறார்.

இதையடுத்து, இப்பள்ளியில் வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் தலைமையில் பெற்றோருடன் கடந்த சில தினங்களுக்கு முன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து கனியாமூரில் இயங்கி வரும் மற்றொரு தனியார் பள்ளியில், கல்வி தடைபட்ட 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கின. இதில் 350 மாணவர்கள் பங்கேற்றனர். விரைவில் 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT