காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு பிறகு சென்னை எழும்பூரில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 13 ரயில்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டன.
இதனால், ரயில் நிலையங்களில் ஆங்காங்கே காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். செல்போன், வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாறிக் கொண்ட சிலர் முன்கூட்டியே வீட்டில் தங்கிவிட்டனர். ரயில்கள் ரத்து குறித்து தகவல் தெரியாமல் எழும்பூர் ரயில் நிலையம் வந்து நடைமேடைகளில் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இதுதொடர்பாக பயணிகள் தனலட்சுமி, சிவகாமி ஆகியோர் கூறும்போது, “நாளை கல்லூரிக்கு செல்ல வேண்டும். அதற்காக முன்பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், இங்கு வந்த பிறகுதான் ரயில்கள் ரத்தானது குறித்து அறிந்தோம். ரயில்கள் ரத்தாகும் தகவலை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் வீட்டிலேயே இருந்திருப்போம்” என்றனர்.
ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளை
ரயில்கள் ரத்தான விஷயம் பரவலாக தெரிந்த வுடன் எழும்பூர் ரயில் நிலையம் முன்பே ஆம்னி பேருந்துகளை வரிசையாக அணிவகுத்து நிறுத்தி தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், வேளாங் கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கினர். வழக்கமான கட்டணத்தைக்காட்டிலும் சுமார் 50 சதவீதம் வரை அதிக கட்டணம் வசூலிக் கப்பட்டதால் பயணிகள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகினர்.