தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே மண்ணில் 15 அடி ஆழத்தில் புதைந்த தொழிலாளியை ஒன்றரை மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டிக்காக சிமென்ட் உறைகளை இறக்க நேற்று காலை 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.
பள்ளம் தோண்டும் பணியில் பேராவூரணி பூக்கொல்லையைச் சேர்ந்த சித்திரவேல்(45) மற்றும் 4 பேர் ஈடுபட்டிருந்தனர்.
இதில், 15 அடி ஆழத்தில் சித்திரவேல் குழிக்குள் இருந்து மண்ணை வெளியே எடுத்து கூடை மூலம் மேலே அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மேலே இருந்த மண் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதில் சித்திரவேல் மண்ணுக்குள் புதைந்தார்.
உடனடியாக அங்கு வேலை பார்த்த மற்ற தொழிலாளர்கள் சித்திரவேல் மீது இருந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் பேராவூரணி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் வீரர்கள் ஏ.சுப்பையன், கே.நீலகண்டன், எம்.ரஜினி, ஆர்.ராஜீவ்காந்தி, அ.மகேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் அங்கு விரைந்து வந்து, மண்ணுக்குள் சிக்கிக் கொண்ட சித்திரவேலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒன்றரை மணிநேர போராட்டத்துக்கு பின்னர், சித்திரவேல் உயிருடன் மீட்கப்பட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சித்திரவேலை பெரும் போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.