சென்னை: வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து நடிகர் தனுஷுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன்.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை. எனவே தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதில் விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இதை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் விசாரணைக்கு தடை விதிக்கவும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இதே கோரிக்கைகளுடன் நடிகர் தனுஷும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நடிகர் தனுஷ் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்களித்து உத்தரவிட்டு விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.