சென்னை: இந்தியாவுக்குத் தேவையான பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம்1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல் விராக்கெட் மூலம் 4,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
இதற்கிடையே, சர்வதேச விண்வெளி சந்தையில், சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, எடை குறைவான செயற்கைக்கோள்களை புவியின் தாழ் சுற்றுப்பாதைக்கு கொண்டுசெல்ல, சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை சுமார் 110 டன்னாகும். இதற்கான செலவும் ரூ.30 கோடிக்குள் அடங்கிவிடும்.
இந்த ராக்கெட் மூலம் மைக்ரோசாட்-2ஏ (இஓஎஸ்-02) செயற்கைக்கோள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. மொத்தம் 142 கிலோ எடை கொண்ட மைக்ரோசாட், கடலோர நிலப் பயன்பாடு மற்றும் ஒழுங்குமுறை, நகர்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும்.
இதில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீட்டர் அளவுக்கு துல்லியமாகப் படம் பிடிக்க முடியும். இதனுடன் ஸ்பேஸ் கிட்ஸ்அமைப்பின் மூலம் ‘ஆசாதிசாட்’எனும் கல்விசார் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.