சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடத்த இதுவரை 1.25 லட்சம் இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 34 நாட்கள் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.
இந்தப் பிரச்சாரப் பயண நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை மதுரவாயலில் நேற்று நடைபெற்றது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். சிவத்திரு தாமோதரன், அமைப்பின் மாநிலச்செயலாளர் மணலி டி.மனோகர், பொதுச் செயலாளர் நா.முருகானந்தம், துணைத் தலைவர் ஜி.கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் கமலேஷ், அமைப்பாளர் க.பக்தன், கலை, இலக்கிய அணி பொறுப்பாளர் கனல் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ‘திராவிட ஆன்மிகம் பித்தலாட்டம்' என்ற புத்தகத்தை மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டார். தொடர்ந்து, இந்துக்களுக்கு எதிராக செயல்படுவோரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், கூட்டத்தில் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது:
இந்துக்களின் உரிமை மீட்புபிரச்சாரப் பயணம் திருச்செந்தூரில் தொடங்கி 34 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்து சமுதாயம் விழிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்த பிரச்சாரப் பயணம் நடத்தப்பட்டுள்ளது.
இந்துக்களுக்காவும், இந்துகோயில்களைப் பாதுகாக்கவும்தான் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. அவ்வகையில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் சிலையை மீட்டு, அதே கோயிலில் வைக்க இந்து முன்னணி நடவடிக்கை மேற்கொண்டது.
இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு, கோயில்நிலங்களை மீட்பதாக கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் அவர் கோயில் நிலங்களை பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, எங்களைக் கூப்பிட்டு, கருத்து கேளுங்கள் என்று தெரிவித்தோம். ஆனால், அவர் இதுவரைஎங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மதமாற்றம் நடக்கிறது.அவற்றை திமுக அரசு கண்டுகொள்வதில்லை. தமிழகத்துக்கு தனி நாடு கேளுங்கள் என்று முஸ்லிம்களை, திமுகவைச் சேர்ந்தவர்கள் தூண்டிவிடுகின்றனர்.
கரோனா காரணமாக கடந்த2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவில்லை. ஆனால், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். இதுவரை 1.25 லட்சம் இடங்களில் விழா நடத்த பதிவு செய்துள்ளனர். இது 2 லட்சமாக உயரும். இவ்வாறு அவர் பேசினார்.