கள்ளக்குறிச்சி: நெய்வேலி என்எல்சியில் 299 பொறியாளர்கள் புதிதாக நியமன செய்யப்படுவதில், ஒருவர்கூட தமிழர் இல்லை என்பது தனக்கு வருத்தமளிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் காமராஜர், தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை அமைத்து, தொழில் புரட்சி ஏற்படுத்தினார். அதன் ஒரு படிதான் என்எல்சி நிறுவனம்.
அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு அப்போது காமராஜர் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். தமிழக இளைஞர்களின் உழைப்பால் அந்நிறுவனம் உயர்ந்து, இந்தியா முழுவதும் கிளைகளை நிறுவி வருகிறது.
ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு, நெய்வேலியில் 299 பொறியாளர்களை தற்போது நியமனம் செய்துள்ளது. அவர்கள் அனைவருமே வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர்கூட தமிழர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் ஒருவர்கூட, அதற்கு தகுதியான பொறியாளர் இல்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது குறித்து தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
சின்னசேலம் தனியார் பள்ளிச் சம்பவத்தில் தமிழக அரசு விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பேட்டியின் போது விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.