சென்னை விமான நிலையம் - மெட்ரோ ரயில் நிலையம் இடையே பயணிகள் சிரமமின்றி வந்து செல்வதற்காக இலவச பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா கடந்த 21-ம் தேதி தொடங்கி வைத்தார். கோயம்பேடு ஆலந்தூர் இடையே ஏற்கெனவே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஞாயிறு மட்டும் மெட்ரோ ரயில் சேவை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், அதில் பயணம் செய்வோர் எண்ணிக்கை 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்குச் செல்ல பயணிகள் அவதிப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான முனைய நுழைவுவாயில்களுக்கு 4 பேட்டரி கார் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு கட்டணம் கிடையாது. தினமும் காலை 10 மணி முதல் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் இந்த பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன.