தமிழகம்

பாட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் எஸ்ஆர்எம் பல்கலை. வழங்கியது; முதுமுனைவர் பட்டம் பெற்றார் நீதிபதி ஏஆர்.லட்சுமணன்

செய்திப்பிரிவு

சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் 12-வது சிறப்புப் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் முனைவர் பா.சத்தியநாராயணன் தலைமை வகித்தார்.

விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் ஏஆர்.லட்சுமணனுக்கு முதுமுனைவர் பட்டமும், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளின் இளநிலை, முதுநிலை உட்பட 6,000 மாணவர்களும் பட்டம் பெற்றனர். 190 மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்றனர்.

சிறப்புரையாற்றிய அமெரிக்க முன்னாள் இணை அமைச்சர் இவான் சாமுவேல் டோபல், ‘‘பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுவருகிற, எதிர்காலத்தில் வல்லரசாகப் போகிற இந்தியாவின் அடையாளமாக நீங்கள் திகழ்கிறீர்கள். அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு வேலை தேடிச் சென்ற காலம் போய், அவர்கள் இந்தியாவைத் தேடி வரும் நிலை உருவாகியுள்ளது’’ என்றார்.

நீதிபதி ஏஆர்.லட்சுமணன் தனது ஏற்புரையில், ‘‘வளர்ந்து வரும் சமூகத்தின் பகுதியாக இருக்கும் மாணவர்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார். சாய்னா நேவால் தனது ஏற்புரையில், ‘‘பாட்மிண்டனுக்கு இந்தியாவில் நல்ல எதிர்காலம் உள்ளது. இளைஞர்கள் உடலை ஆரோக்கியத்தோடு வலுப்படுத்தினால் எதிர்காலம் சிறப்பாகும்’’ என்றார்.

எஸ்ஆர்எம் பல்கலை. துணைவேந்தர் பிரபிர் கே.பக்சி தனது வரவேற்புரையில், ‘‘இருப்போர் இல்லாதோர் இடையிலான இடைவெளியைக் குறைக்க பட்டதாரிகள் பணியாற்றவேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT