தமிழகம்

திருச்சியில் தெற்கு போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர் பணியிடம் ரத்து: விபத்துக்கள் அதிகரிக்கும் அச்சம்

அ.வேலுச்சாமி

திருச்சி: திருச்சி மாநகர காவல் போக்குவரத்து பிரிவில் கடந்த 28 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் பணியிடம் நாளையுடன் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக தெற்கு போக்குவரத்து பிரிவு கட்டுப்பாட்டில் கன்டோன்மென்ட், அரியமங்கலம் ஆகிய போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களும், வடக்கு போக்குவரத்துப் பிரிவின் கட்டுப்பாட்டில் ரங்கம், உறையூர், கோட்டை, பாலக்கரை ஆகிய போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர மாநகர பகுதிக்குள் நடைபெறக்கூடிய விபத்துகள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்காக தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு (கன்டோன்மென்ட்), வடக்குபோக்குவரத்து புலனாய்வு பிரிவு (கோட்டை) ஆகியவையும் போக்குவரத்து பிரிவு காவல் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இவ்விரு போக்குவரத்து பிரிவுக்கு தலா ஒரு உதவி ஆணையர் பணியிடம் கடந்த 1996 முதல்செயல்பாட்டில் இருந்து வந்தது.இந்த சூழலில் தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் பணியிடத்தை திரும்பப் பெறுவதாக (ரத்து செய்து) டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் நாளை (ஜூலை 31) வரை மட்டுமே இப்பணியிடம் செயல்பாட்டில் இருக்கும். இப்பிரிவில் பணியாற்றி வரும் உதவி ஆணையர் முருகேசன், தஞ்சாவூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டார். இது மாநகர காவல் துறை வட்டாரத்திலும், சாலை பாதுகாப்பு ஆர்வலர்களிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸார் கூறும்போது, ‘‘திருச்சி மாநகரில் வாகனப்பெருக்கம், விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுதவிர மத்தியமண்டலத்திலுள்ள 9 மாவட்டங்களில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விவிஐபிக்கள் அனைவரும் திருச்சி விமானநிலையம் வழியாகவே வந்து செல்வதால் சாலை போக்குவரத்தில் திருச்சி மாநகரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

அப்படிப்பட்ட சூழலில் இப்பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளக்கூடிய 2 பேரில், ஒரு உதவி ஆணையர் பணியிடத்தை திரும்பப் பெற்றுள்ளதால், இனி ஒரே ஒரு உதவி ஆணையரே ஒட்டுமொத்த மாநகர் முழுவதும் கவனிக்க வேண்டிய நிலை வரும். இதனால் அவருக்கு பணிச்சுமை, நெருக்கடி அதிகரிக்கும்’’ என்றனர்.

இதுகுறித்து திருச்சி மாநகர மேம்பாட்டுக் குழுவின் (டைட்ஸ்) நிர்வாகக்குழு உறுப்பினர் ஷியாம் சுந்தர் கூறும்போது, ‘‘முன்பு திருச்சி மாநகரில் போக்குவரத்து பிரிவுக்கென தனி துணை ஆணையரே இருந்தார். சில மாதங்களுக்கு முன் அந்த பணியிடம் நீக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, தற்போது அப்பிரிவுக்கான ஒரு உதவி ஆணையர் பணியிடமும் திரும்ப பெறப்பட்டுள்ளது.

மாநகரின் விரிவாக்கத்துக்கேற்ப போக்குவரத்து பிரிவுக்கு கூடுதலான காவல் நிலையங்கள், காவல் அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தும் வரும் நிலையில், இருக்கக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கையையும் குறைப்பது வேதனையளிக்கிறது.

இதனால் மாநகரில் போக்குவரத்து நெரிசல், விபத்து தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இந்த உத்தரவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘‘இதுதொடர்பாக தற்போதுதான் உத்தரவு வந்துள்ளது. ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT