மதுரை: நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது என தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி கூறினார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளையின் 18-வது ஆண்டு விழாமற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் (எம்எம்பிஏ) 17-வது ஆண்டு விழா ஆகியன உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்றது.
இதையொட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் ஆகியோர் கேக் வெட்டினர். முன்னதாக பார் அசோசியேஷன் தலைவர் எஸ்.னிவாசராகவன் வரவேற்றார்.
இதில் தலைமை நீதிபதி பேசியதாவது: நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை விரைவில் விசாரித்து தீர்வு காண்பதில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது. இதில் மதுரை கிளையின் பங்கு அதிகம். கரோனாகாலத்தில் அதிகளவில் வழக்குகளை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றமும், மதுரை கிளையும் சாதனை படைத்துள்ளது.
வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மட்டுமே நீதித் துறை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இல்லாவிட்டால் நீதித் துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். இதனால் வழக்குதொடர்பவர்களுக்கு வழக்கறிஞர்கள் நம்பிக்கை அளிக்க வேண்டும் என்றார்.