தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக, வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது. அதிமுகவில் மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடுபவர்கள் மனுதாக்கல் முடித்து தங்கள் பகுதிகளில் பிரச்சார வேலைகளையும் தொடங்கிவிட்டனர்.
‘எதிரிகளே எங்கள் கட்சிக்காரர்கள்தான்’
இந்த நிலையில், போட்டிக்களத்தில் இருக்கும் அதிமுக வேட்பாளர்களிடம், ‘உங்களுக்கு போட்டி யாருடன்?’ என்று கேட்டால், ‘எங்களுக்கு திமுக வேட்பாளர் எதிரியே அல்ல, எதிரி எங்க கட்சிக்காரர்கள் மட்டுமே’ என்று தெரிவிக்கிறார்கள். திமுக வேட்பாளர்களிடம் இதே கேள்வியை கேட்டாலும், ‘ஆளுங்கட்சியை சமாளிக்கிறதை விட எங்க கட்சியினரின் உள்ளடி வேலைகளை கவனிப்பதே பெரும்பாடாக இருக்கிறது’ என்கின்றனர்.
இப்படி, இரு பெரிய கட்சிகளிலும் கோஷ்டி அரசியலும், உள்ளடி வேலைகளும் மித மிஞ்சிக் காணப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக சீனியர் ஒருவர் கூறியதாவது:
எங்கள் கட்சியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன், மாநகராட்சிப் பகுதிகளில் குறிப்பாக 69, 71 மற்றும் 73 ஆகிய 3 வார்டுகளைச் சேர்ந்தவர்கள் அன்று இரவே கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அடுத்த நாளும் இந்த போராட்டம் நீடித்தது. ‘சீட்’ அளிக்கப்பட்ட துணை மேயர் லீலாவதி உண்ணி மற்றும் மேலும் 2 பேருக்கு ‘சீட்’ கொடுத்ததை எதிர்த்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
அதேபோல், ரத்தினபுரி பகுதியிலும் வேட்பாளர்களை மாற்றக்கோரி கட்சிக் கிளை அலுவலகம் முன்பு 30-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர். எதுவும் எடுபடாததால், அவர்களாகவே அந்தந்த பகுதியில் உள்ளடி வேலைகளை தொடங்கிவிட்டனர். இது இங்கே நடந்த வெளிப்படையான எதிர்ப்பு.
ஆனால், மறைமுகமாக மாநகராட்சியில் உள்ளடங்கியிருக்கும் 100 வார்டுகளிலும் வார்டுக்கு தலா 10 நிர்வாகிகளுக்கு மேல் அந்தந்த வார்டில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். பூத் கமிட்டி உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பார்ப்பவர்கள் இவர்கள்தான். போட்டி வேட்பாளர்களை நிறுத்துவது, எதிர்க்கட்சியினருக்கு விலைபோவது, வீடு, வீடாக, தெருத்தெருவாக மக்களை சந்தித்து, ‘ஓட்டுக் கேட்க அவங்க வந்தா, போன அஞ்சு வருஷம் என்ன செஞ்சீங்கன்னு கேளுங்க. இதில் இத்தனை கோடி சம்பாதிச்சிருக்காங்க. புது வீடு கட்டியிருக்காங்க. கார், பஸ்ன்னு வாங்கியிருக்காங்க. அதெல்லாம் எப்படி வந்ததுன்னு கேளுங்க. நாங்க கட்சிக்காரங்கதான். ஆனா, அவங்க சுத்தமில்லாததால நாங்களே அவங்களுக்கு வேலை செய்யறதில்லைன்னு முடிவு பண்ணீட்டோம்’ என்றெல்லாம் கூட பலர் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.
பழைய ஆளே ‘சீட்’ கிடைச்சு நின்னா இப்படின்னா, புதுசா வந்தவங்களை பற்றி இன்னமும் மோசமான அவதூறு கிளப்பறாங்க. ‘அவர் சாதாரண கிளைச் செயலாளராக இருந்தே அத்தனை சம்பாதிச்சார். இனி கவுன்சிலர் ஆனா அவ்வளவுதான். பழைய கவுன்சிலரும், இவரும் சேர்ந்துதான் அன்னெய்க்கு அத்தனை முறைகேடுகள் செஞ்சாங்க’ன்னு இஷ்டம் போல தனிப்பிரச்சாரம் நடக்குது.
இப்படிப்பட்ட பிரச்சாரங்களை செய்யற ஆட்களை பார்த்து எதிர்க்கட்சிக பிடிச்சு கணக்குப்பண்ணுது. இதையெல்லாம் சரிக்கட்ட வேண்டியது மாவட்டச் செயலாளர், அமைச்சர், எம்.எல்.ஏக்கள்தான். அவங்க எல்லாம் சென்னையில் ஆஸ்பத்திரி வாசல்லயே தவம் கிடக்கிறாங்க. நாங்க இதை எப்படி சமாளிக்கிறதுன்னு புரியாம வார்டுக்குள்ளே பிரச்சாரத்துக்கு போயிட்டிருக்கோம்’ என்றனர்.
திமுக உள்ளூர் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
மாநகராட்சி 100 வார்டுகளிலும் ஆளுங்கட்சி தரப்புல பணம், பதவி, அதிகாரம்ன்னு தூள் பறக்குது. இப்பவே வெற்றி பெற்ற மாதிரியான தன்மை அங்கே தெரியுது. ஆனால், இங்கே மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்ட, பகுதிக் கழக நிர்வாகிகள் அளவில் கிடைத்த சீட்டுகளை பங்கு போட்டுட்டாங்க. தங்களுக்குத் தேவையான ஆட்களுக்கு ‘சீட்’ தர்றாங்க. உண்மையிலேயே 18 வயது முதல் கட்சிக்காக பாடுபட்டுட்டு கிளை அளவுலயே இருக்கிற தொண்டன் பாதிக்கப்பட்டு கிடக்கிறான். அதை தலைமை ஒரு பொருட்டாகவே நினைக்கலை.
உதாரணமாக, கோவையில் கட்சியின் சீனியர், கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர், இந்நாள் மாவட்டச் செயலாளர்கள் இருவர், மூத்த முன்னோடி, அவரது வாரிசு இப்படி 10 பேர் மட்டும் இருக்கிற சீட்டுகளை பங்கு போட்டு எடுத்துகிட்டாங்க. அவங்கவங்க ஆதரவாளர்களுக்கு அந்தந்த பகுதியில் ‘சீட்’ கொடுத்துட்டாங்க. கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் காங்கிரஸுக்கு 17, மனிதநேயக் கட்சிக்கு 1 என்ற கணக்கில் பிரித்துக் கொடுத்துவிட்டு மீதமுள்ள 86 வார்டுகளில் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த சீட்டுகளை சீனியாரிட்டிப்படி 10 முதல் 7 சீட்டுகள் வரை மேற்படி 10 பேரே பிரிச்சுகிட்டாங்க. பலர் சீட்டுகளை ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விற்றுள்ளார்கள். காசில்லாதவனுக்கு ‘சீட்’ இல்லை.
அப்படியே அந்த தொண்டன் ரகளை செஞ்சா அவன் குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலையை சுட்டிக்காட்டி, ‘ஆளுங்கட்சியில் ஒரு வேட்பாளர் ஓட்டுக்கு ரூ.500-ம் தேர்தல் செலவு ரூ. 25 லட்சமும் செய்யத் தயாராயிருக்கிறார். உங்களால் முடியுமா? அதுதான் பணம் உள்ளவரைப் பார்த்து ‘சீட்’ தரவேண்டியிருக்கு’ என்றெல்லாம் அச்சுறுத்தி மூளைச்சலவை செய்து அனுப்புகிறார்கள். அதனால் உண்மையான கட்சிக்காரர்கள் வேலை செய்யத் தயாராக இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது’ என்றார் அந்த நிர்வாகி.