கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளதால், குடிநீர் கிடைக்காமல் நோயாளிகள் பரிதவிக்கும் நிலை உள்ளது.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துமவமனைக்கு, கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இதில் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருபவர்கள் காலை நேரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் ஆலோசனை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதே போல், ஆண்கள், பெண்கள் வார்டு, பிரசவ வார்டு, அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவைகளில் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும், மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவமனையில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் ஆர்ஓ கருவி பொருத்தப்பட்டது. காலப்போக்கில் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், அவ்வாறு பொருத்தப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்ஓக்கள் பயனில்லாமல் போனது. இவ்வாறான நிலையில் தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்பாக ரூ.1 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டது.
பராமரிப்பு இல்லை
இதன் மூலம் புறநோயாளி களாக வருபவர்கள் மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளத் தேவையான குடிநீர் அங்கேயே கிடைத்து வந்தது. இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாமல் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பயனற்று கிடக்கிறது. இதனால், நோயாளிகளும், மருத்துவ மனைக்கு வரும் பொது மக்களும் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. வசதியுள்ளவர்கள் மருத்துவமனைக்கு வெளியே உள்ள கடைகளில், குடிநீரை விலை கொடுத்து வாங்கி தாகத்தைத் தீர்த்து கொள் கின்றனர். ஆனால், ஏழை, எளிய மக்கள் மருத்துவமனைக்கு வெளிப்புறம் உள்ள தேநீர் கடைகள், ஓட்டல்களில் உள்ள சுத்திகரிக்கப்படாத தண்ணீர் வாங்கிக் குடிக்கும் நிலை உள்ளது.
அதிருப்தி
அரசு மருத்துவமனையில் உயரதிகாரிகள் ஆய்வு வரும்போது மட்டுமே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீர் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசின் முன் மாதிரி மருத்துவமனை அமைப்பது குறித்து தேசிய சுகாதாரத் திட்ட மேம்பாட்டு குழுவினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் ஆய்வு குழுவினர் அதிருப்தியுடன் சென்றது குறிப்பிடத்தக்கது.