விழுப்புரம்: மரக்காணம் அருகே உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள கட்டிடங்கள், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை 18 ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் மாதம் ஆழி பேரலை என்கிற சுனாமி வாரி சென்றது. அதிலிருந்து இன்னமும் மக்கள் முழுமையாக மீளவில்லை. அப்படி பாதிக்கப்பட்ட கிராமங்களில் முதலியார்குப்பமும் ஒன்றாகும்.
இக்கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்போது 316 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை இந்தியன் ஆயில் நிறுவனம் சுத்தப்படுத்தி, வண்ணம் தீட்டும் பணியை கடந்த ஒரு மாதமாக செய்து வருவதாக தகவல் கிடைத்தது.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் திருவள்ளுவனிடம் கேட்டபோது, “எங்கள் பள்ளி யில் உள்ள நபார்டு கட்டிடம், ராஜஸ்தான் கட்டிடம் எஸ்எஸ்ஏ கட்டிடம், அறிவியல் ஆய்வகம் மற்றும் மதில்சுவர் ஆகியவற்றை ரூ. 11 லட்சம் செலவில் இந்தியன் ஆயில் நிறுவனம்சீரமைத்து வண்ணம் அடித்து வருகிறது. மேலும், பூங்கா, குறுங்காடு மற்றும் 1,000 மரக்கன்றுகள் நடுதல் பணிகளையும் செய்து வருகிறது.
இதற்கு உற்ற துணையாக இருந்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மேற்பார்வை செய்து ஆலோசனை வழங்கிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொறியாளர் சரவணன், நிதி ஒதுக்கீடு செய்து தினமும் கண்காணித்து ஆலோசனைகள் வழங்கிய மனித வள மேலாளர் குமார் ஆகியோருக்கு முதலியார்குப்பம் மக்களின் சார்பாகவும், எங்கள் பள்ளியின் சார்பா கவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
இப்பகுதியில் உள்ள 254 அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமை செயலாளராக பதவி வகிக்கும் இறையன்பு நன்கொடைகள் மூலம் கட்டிக் கொடுத்துள்ளார்.
அவர் பெயரிலேயே மீனவர் குடியிருப்பு வரவேற்பு வளைவு அமைக் கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இப்பள்ளிக் கட்டிடமும் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் சீரமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.