விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மானக் கழகம் மூலம் ‘ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம்” என்ற மின்சார பெரு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இக் கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானம் தன்னிறைவு செயற்பாடுகள் தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் கூறியது:
நாள் ஒன்றுக்கு 2,48,584 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி தற்போது, 4,00,000 மெகா வாட்டாகமின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அண்டை நாடுகளுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யப் படுகிறது. நாடு முழுவதும் ஒரே லைனில் இணைக்கப்பட்டு, ஒரேஅலைவரிசையில் ஒரே மின் விநியோக கட்டமைப்பாக இணைக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் லடாக் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் முதல் மியான்மர் எல்லை வரை அமைந்த இது உலகின் மிக பெரிய ஒருங்கிணைந்த மின் விநியோக கட்டமைப்பாகும். இக்கட்டமைப்பின் மூலம் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு 1,12,000 மெகா வாட் மின்சாரத்தை அனுப்ப முடியும்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் ரூ. 803 கோடி செலவில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் கரூர் ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதனை தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மின்சாரத்தை சிக்கனமாக பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த பட்டிமன்றம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் தலைமை பொறியாளர் செல்வசேகர், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.