ராமேசுவரம்: பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் வலையில் உயிருடன் சிக்கிய சிங்கி இறால் ஒன்று ரூ.10 ஆயிரத்துக்கு விலை போனது.
பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 80 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும் பினர். இதில் ஒரு மீனவர் வலையில் 2 கிலோ எடையிலான ராட்சத சிங்கி இறால் சிக்கியது. இது ரூ.10 ஆயிரத்துக்கு விலை போனது.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: வெளிநாடுகளில் சிங்கி இறால் உயிருடன் தொட்டியில் இருந்தால்தான் வாங்கி சமைத்து சாப்பிடுவர். இந்தியாவில் சிங்கி இறால் விலை அதிகம்.
இறந்த இறால்கள் மட்டுமே பெரும்பாலும் இங்கு அதிகம் விற்பனையாகும். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் உயிருடன் சிக்கும் சிங்கி இறால்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். சிங்கி இறால் உயிருடன் இருந்தால் மட்டும்தான் அதிக விலை கொடுத்து, வியாபாரிகள் மீனவர்களிடமிருந்து கொள்முதல் செய்வர். இதனால் வலையில் சிங்கி இறால்கள் சிக்கினால் கவனமாக அவற்றை உயிரோடு கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வோம்.
சிங்கி இறால் எவ்வளவு பெரியதாக இருக் கிறதோ அதற்கு ஏற்ப விலை கிடைக்கும். ஒரு சிங்கி இறால் ஒரு கிலோ எடையில் இருந்தால் ரூ.4000 ஆயிரம் வரையிலும், 500 கிராம் இருந்தால் கிலோவுக்கு ரூ.1,750 முதல் ரூ.2,000 வரையிலும், ரூ.100 கிராமுக்கு மேல் இருந்தால் கிலோவுக்கு அதிக பட்சமாக ரூ.1500 வரையிலும் நிர்ணயித்து வியாபாரிகள் வாங்குகிறனர்.
அதே சிங்கி இறால்கள் இறந்து போயிருந்தால் கிலோவுக்கு ரூ.500 வரை கிடைக்கும், என்றனர்.