புதுக்கோட்டை: தமிழகத்தில், விவசாயப் பணிகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்படும் மாட்டுவண்டிகள் ஆறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய குற்றச்சாட்டின் அடிப்படையில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
வழக்கு முடிவதற்குள், அந்த மாட்டுவண்டிகள் மக்கி, துருப்பிடித்து மண்ணாகிப்போகும் நிலையில் இருப்பதால் விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகின்றனர்.
மேலும், இதற்கான அபராதத் தொகையும் அதிகமாக இருப்பதால், அதைச் செலுத்தி மாட்டுவண்டிகளை மீட்டுச் செல்ல முடிவதில்லை. இதனால், மாட்டுவண்டிகளை வைத்து பிழைப்பு நடத்துவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, காவல் நிலையங்களில் உள்ள மாட்டுவண்டிகளை அரசு விடுவிக்க வேண்டும் என மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அறந்தாங்கி மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கத் தலைவர் சிதம்பரம் கூறியதாவது: விவசாயப் பணிகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும் மாட்டுவண்டிகளை அனுமதியின்றி மணல் அள்ளிய குற்றத்துக்காக போலீஸார் பறிமுதல் செய்கின்றனர். அந்த மாட்டுவண்டிகளை உடனே எடுக்க முடியாது.
வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு சில ஆண்டுகளாகின்றன. இதனால் காவல் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் மாட்டுவண்டிகளின் டயர்கள், மரச்சட்டங்கள், இரும்புகள் போன்றவை மக்கி, துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலைக்குப் போய்விடுகின்றன.
இந்த வண்டிகளை யாரிடமும் விற்கவும் முடியாது. மேலும்,தினசரி மாடுகளை பராமரிப்பதற்கு குறைந்தது ரூ.200 வீதம் செலவாவதால், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய மாடுகளை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
வழக்கு செலவு, அபராதம் என ரூ.50,000-க்கும் மேலாவதால், பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, மாட்டுவண்டிகளை சிறைபிடிக்காமல் விடுவிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாட்டுவண்டி தொழிலாளர்களை உள்ளடக்கியுள்ள சிஐடியு தொழிற்சங்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் கூறியதாவது: டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டுள்ளன.
அரசு அனுமதி பெற்று நடத்தப்படும் மணல் குவாரிகள், கல் குவாரிகளில் அதிமான விதிமீறல்கள் நடைபெறும்போது, மாட்டு வண்டித் தொழிலாளர்களை மட்டுமே குறைகூறுவது சரியல்ல. லாரி போன்ற கனரக வாகனங்களைப்போல மாட்டுவண்டிகளை அரசு கருதக்கூடாது.
எனவே, பறிமுதல் செய்யப்படும் மாட்டுவண்டிகளை ஆண்டுக் கணக்கில் போட்டுவைத்து சேதம் விளைவிக்காமல், பத்திரம் போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தைப் பிணையாக பெற்றுக்கொண்டு, மாட்டுவண்டிகளை உடனே விடுவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து திட்டமிட்டுள்ளோம்.
மாட்டுவண்டிகளில் மணல் அள்ளுவதைத் தடுப்பதால், உள்ளூரில் ஏழை, எளியோர் வீடு கட்டிக்கொள்ள முடியவில்லை. எனவேதான், மாட்டுவண்டிகளுக்கென தனியாக மணல் குவாரிகளை திறக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.