கன்னியாகுமரியில் அதிக சுற்று லாப் பயணிகள் கூடும் சபரிமலை சீஸன் இன்னும் 20 நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவை யான அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். வெளிநாட்டில் இருந்தும் பயணிகள் வருகின்றனர். கோடை விடுமுறை சீஸன் உட்பட எத்தனையோ சீஸன் வந்தாலும், கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் முடியும் சபரிமலை சீஸனில்தான் கன்னி யாகுமரி களைகட்டும். இந்த காலகட்டத்தில் தீபாவளி, கிறிஸ் துமஸ், புத்தாண்டு, பொங்கல் என, முக்கிய பண்டிகை நாட்கள் வருவதும் தனிச் சிறப்பு.
நவம்பர் 16-ம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கிறது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கன்னியாகுமரியில் சபரிமலை சீஸன் களைகட்டி விடும். பல்வேறு புண்ணிய தலங்களுக்குச் சென்று வரும் ஐயப்ப பக்தர்கள், கன்னியாகுமரி முக்கடலில் நீராடி சபரிமலை செல்வார்கள். அல்லது சபரிமலையில் தரிசனம் முடித்த பின் கன்னியாகுமரியில் நீராடி, ஊர் திரும்புவார்கள்.
70 நாள் திருவிழா
நவம்பர் 10-ம் தேதியில் இருந்தே சீஸன் தொடங்குகிறது. பொங்கல் முடிந்த பின் ஜனவரி 20-ம் தேதி சீஸன் நிறைவு பெறுகிறது. 70 நாட்கள் வரையிலான சபரிமலை சீஸனில் அதிக வருவாய் ஈட்டு வதற்கான முன்னேற்பாடுகளை அரசு மற்றும் தனியார் துறைகள் செய்யத் தொடங்கியுள்ளன. அதேநேரம் வழக்கம்போல் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான பணிகள் இது வரை தொடங்காமல் இருப்பது பக்தர்கள் மற்றும் பொதுநல ஆர் வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அரசுத்துறை அலட்சியம்
கன்னியாகுமரி பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் கூறும்போது, “சர்வதேச சுற்றுலா தலம் என்ற பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இங்கு உள்ள முக்கிய தலங்களைப் பராமரிப்பதில் அரசுத்துறை அலட்சியம் காட்டி வருகிறது. குறிப்பாக சபரிமலை சீஸனில் பக்தர்கள் இங்கு வருவதே, முக்கடலும் ஒன்று சேரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்குத்தான். ஆனால் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் திரிவேணி சங்கமத்தில் நீராடும் பகுதியில் நிறைந்துள்ள கூரிய பாறாங்கற்கள் அகற்றப்படவில்லை.
இதுபோல், 16 கால் மண்டபத்தின் கீழ் உள்ள படித்துறையில் பக்தர்கள் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். இதையும் சீரமைக்க வேண்டும். முக்கடல் சங்கமத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை மூடியே கிடக்கிறது. இதையும் சீஸன் நேரத்தில் போலீஸாரை அமர்த்தி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீராடும் பக்தர்கள் ஆடைகள் மாற்றுவதற்கு கன்னியாகுமரி தேவசம் நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தற்காலிக அறைகளை அமைக்க வேண்டும். கட்டண கழிப்பறைகள், குளியலறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும். முக்கடல் சங்கம வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா இயங்கவில்லை. கேமராவை சீஸனுக்குள் சீரமைக்க வேண்டும்.
ஒரே இடத்தில் மட்டும் கார் பார்க்கிங் மற்றும் நுழைவுக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். சுகாதாரம், குடிநீர் வசதிகளையும் முறையாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பகவதியம்மன் கோயிலில் கோடி அர்ச்சனை என்ற பெயரில் பக்தர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்கவேண்டும்” என்றார்.