தமிழகம்

குறைந்த செலவில் அதிக வருமானம்: பீன்ஸ் சாகுபடியில் ஆர்வம் காட்டும் ஓசூர் விவசாயிகள்

ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த செலவில் அதிக வருமானம் தரும் பீன்ஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஓசூர் அருகே உள்ள பாகலூர், அலசநத்தம், பேரிகை, கொத்தப்பள்ளி, அத்திமுகம், கே.எம்.தொட்டி மற்றும் கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பீன்ஸ் சாகுபடியில் அதிகளவில் ஈடு பட்டுள்ளனர். இப்பகுதிகளில் நடப்பாண்டில் கோடை காலத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்ததால் பீன்ஸ் தோட்டத்தில் பூக்கள் உதிர்ந்து மகசூல் குறைந்தது.

இதனால் காய்கறி சந்தைகளுக்கு பீன்ஸ் வரத்து குறைந்து விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் ரூ.35 வரை விற்று வந்த ஒரு கிலோ பீன்ஸ், தற்போது மொத்த விற்பனையில் ரூ.60 ஆக விலை உயர்ந்துள்ளது. அதேபோல சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் விலை ரூ.80 வரை அதிகரித்துள்ளது.

தற்போது பீன்ஸ் தேவை அதிகமுள்ளதாலும், சந்தையில் நல்ல விலை கிடைப்பதாலும் கூடுதல் பரப்பளவில் பீன்ஸ் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் ஜீமங்கலம் கிராமத்தில் பீன்ஸ் பயிரிட்டுள்ள விவசாயி சேகர் கூறுகையில், "கடந்த ஆண்டு வரை உருளைக்கிழங்கு சாகுபடி செய்து வந்தேன். தற்போது பீன்ஸ் சாகுபடி செய்துள்ளேன். ஒரு ஏக்கரில் பீன்ஸ் சாகுபடி செய்ய சுமார் 6 கிலோ விதை தேவைப்படுகிறது.

சொட்டூ நீர் பாசனம் செய்து நன்கு பராமரித்து வந்தால் 60 நாட்களில் பூ பூக்கிறது. 90 நாட்களில் அறுவடைக்கு வருகிறது. சந்தையில் ஆண்டுதோறும் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.30-க்கு குறையாமல் விற்பனையாகிறது. குறைந்த செலவில் அதிக வருமானம் கிடைத்து வருவதால், இப்பகுதி விவசாயிகள் பீன்ஸ் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். ஓசூர் தோட்டக்கலைத் துறை மூலமாக சிறு விவசாயியான எனக்கு சொட்டு நீர் பாசன கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் அதிக மகசூல் பெற ஆலோசனைகளும் வழங்குகின்றனர்" என்றார்.

இதுகுறித்து ஓசூர் துணை தோட்டக்கலை அலுவலர் சுப்பிரமணியன் கூறுகையில், "பீன்ஸ் ஒரு குறுகிய கால தோட்டப்பயிராகும். பயிரிடப்பட்ட 3 மாதங்களுக்கு பிறகு ஆறு மாதங்கள் வரை 6 அல்லது 7 முறை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கரில் மொத்தம் 7 டன் வரை மகசூல் கிடைக்கும். தோட்டக்கலைத் துறை சார்பில் சிறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன கருவிகள் 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் வழங்கப்படுகின்றன. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும" இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT