சென்னை: அடையாற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த சிட்டிசன் ஃபோரம்என்ற அமைப்பின் நிர்வாகியான கிருஷ்ணகுமார் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், அடையாறு ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களில் வெள்ளம்பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதால் பொதுமக்கள் கடும் துயரத்துக்கு ஆளாக நேரிடுகிறது.நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பது அரசின் கடமை. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஒருங்கிணைப்பு அவசியம்
எனவே அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ளஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முழுமையாக அகற்றஉத்தரவிட வேண்டும். ஏற்கெனவே இப்பகுதிகளில் உள்ளஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில்மாற்று இடம் வழங்க கொண்டு வரப்பட்ட திட்டமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை" என அதில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘‘கூவம் மறுசீரமைப்பு அறக்கட்டளை மூலமாக மறு சீரமைப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தகுந்த நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீதிமன்ற தடை உத்தரவு இல்லாத பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. எனவே ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை ஏற்கெனவே நிலுவையில் உள்ளவழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.