ராமதாஸ் | கோப்புப் படம். 
தமிழகம்

“27-ஆவது தற்கொலை இது... ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய இன்னும் தயங்குவது ஏன்?” - ராமதாஸ்

செய்திப்பிரிவு

சென்னை: “ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பின்னர் கடந்த ஓராண்டில் நிகழும் 27-ஆவது தற்கொலை இதுவாகும்” என்று சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு இன்னும் தயங்குவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவு: 'ஆன்லைன் சூதாட்டம் மற்றும் தடை செய்யப்பட்ட கேரள பரிசுச்சீட்டில் ரூ.18 லட்சத்தை இழந்த தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும். ஏற்கெனவே பெரும் பணத்தை இழந்த பிரபு, தமது வீட்டை விற்க முன்பணம் பெற்று அதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வர முடியாது என்பதற்கு பிரபுவின் கதை தான் வேதனையான எடுத்துக்காட்டு.

ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பின்னர் கடந்த ஓராண்டில் நிகழும் 27-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என அரசு அறிவித்த பிறகு நிகழ்ந்த 4-ஆவது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு இன்னும் தயங்குவது ஏன்?

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் ஓர் உயிர் கூட பறிபோகக் கூடாது. வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதியுடன் சூதாட்டத்தடை நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT