சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்த போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து செஸ் வீரர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்," நான் மிகவும் விரும்பும் உள்ளரங்கு விளையாட்டு செஸ். அனைத்து செஸ் வீரர்களுக்கும் வாழ்த்துகள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் சென்னை வந்துள்ளனர். இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.
இன்று மாலை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், சர்வதேச செஸ் கூட்டமைப்பு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பைச் சேர்ந்த பலர் கலந்துகொள்கிறார். மேலும் இந்த விழாவில் பங்கேற்க முக்கியத் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.