சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள ஆத்துக்காடு அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு திருமணி முத்தாற்றில் நுரை பொங்கிச் சென்றது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் நுரையை அகற்ற முயற்சித்த இளைஞர்கள். 
தமிழகம்

சேலம் உத்தமசோழபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் பெருகிய நுரையால் தரைப்பாலம் மூழ்கடிப்பு

செய்திப்பிரிவு

சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் அருகே ரசாயனக் கழிவுநீர் காரணமாக திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட நுரைப்பெருக்கு, அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

சேலம் வழியாக பாயும் திருமணிமுத்தாற்றில் நகரின் கழிவுநீர், சாயப்பட்டறைக் கழிவு நீர் உள்ளிட்டவை தொடர்ந்து கலக்கிறது. இது குறித்து மக்கள் புகார் கொடுத்தும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தும் கழிவுநீர் கலப்பு தொடர்கிறது.

இந்நிலையில், சேலம் மற்றும் சுற்று வட்டாரங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால், திருமணிமுத்தாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

உத்தமசோழபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் நுரை பொங்கி வெளியேறி ஆற்றின் நீரோட்டத்தைக் காண முடியாத அளவு பெருக்கெடுத்தது. ஆத்துக்காடு என்ற இடத்தில் உள்ள தரைப்பாலம் நுரைப்பெருக்கினால் மூடப்பட்டது.

இதனால் தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்தனர். இந்நிலையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் அங்கிருந்த மட்டைகளைக் கொண்டு நுரையை சிறிது சிறிதாக அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் தரைப்பாலத்தை அவர்கள் பயன்படுத்தினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

சேலத்தில் உள்ள சாயப்பட்டறைகள், சலவைப்பட்டறைகள் உள்ளிட்டவை பலவும், ரசாயனக் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் சட்ட விரோதமாக தேக்கி வைத்திருந்து, மழைக்காலத்தில் திருமணிமுத்தாற்றில் கலந்து விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

இதனால், மழைக்காலத்தில் ரசாயனக் கழிவுநீரை திருமணிமுத்தாறு அதிகமாக சுமந்து வருகிறது.

இந்த கழிவுநீரால் ஆற்றில் ஏற்படும் நுரைப்பெருக்கு தரைப்பாலத்தை மூழ்கடிக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT