விருதாச்சலம்: சின்னசேலம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தில் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு அவர் கூறியது: மாணவி உயிரிழப்பில் ஏராளமான கேள்விகள் உள்ளன. இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கும் காவல் துறைக்கும் உள்ளது.
உயிரிழந்த மாணவிக்கு 14-ம் தேதி காலையில் அவசர அவசரமாக உடற்கூறாய்வு நடைபெறுகிறது. அந்த அறிக்கையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உடலில் பல்வேறு இடங்களில் சிராய்ப்பு காயங்கள் உள்ளன. மாடியில் இருந்து குதித்தால் கால் அல்லது கையோ உடையும். ஆனால் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளன. இதனால் சந்தேகம் எழுகிறது.
மாணவி உயிரிழப்பு நடந்தது எப்படி? அதற்கு யார் யார் காரணம்? என்ற விசாரணையை தீவிரப்படுத்துவதற்கு பதிலாக பள்ளி சேதம் அடைந்தது பற்றியும், தீ வைத்தது பற்றியும், பொருட்களை சூறையாடியது பற்றியும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.