கோவையில் மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

கோவை | இருமுறைக்கு மேல் விபத்து ஏற்படுத்திய 500 வாகன ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

செய்திப்பிரிவு

இருமுறைக்கு மேல் விபத்து ஏற்படுத்திய, 500 வாகன ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில், செல்போன் திருட்டு புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார் கடந்த 2 மாதங்களில் மொத்தம் 106 செல்போன்களை மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.15.90 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர் களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமை வகித்து செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 4 மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.52 லட்சம் மதிப் பிலான 350 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 149 போக்ஸோ வழக்குகளுக்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 9 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது. ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் மூலம் 28 நாட்களில்36 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 347 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை தொடர்பாக 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 252 கிலோகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. இவ்வழக்கில் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக மரணம் என பதிவாகும் வழக்குகளில், அவர்களின் உறவினர்களுக்கு இறப்புச் சான்றிதழ் பெற சிக்கல் இருந்தது. அவ்வாறு இருந்த 140 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இரண்டு முறைக்கு மேல் சாலை விபத்தை ஏற்படுத்திய 740 பேர் கண்டறியப்பட்டு, அதில் 500 பேரின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு பரிந்துரைத் துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப் பாளர்கள் ரவிச்சந்திரன், ஆறுமுகம் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT