சென்னை: 44-வது உலக செஸ் போட்டி தொடக்க விழா சென்னை பெரியமேடு ராஜா முத்தைய்யா சாலையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக ஆளுநர், முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதையடுத்து, பாதுகாப்பு காரணம் கருதியும், வாகன நெரிசலைத்தடுக்கும் வகையிலும் இன்று (ஜூலை28) மதியம் முதல் இரவு 9மணிவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜா முத்தைய்யா சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் சுற்றியுள்ளபகுதிகளில் போக்குவரத்து நெரிசல்ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தேவை ஏற்படின் டிமலோஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக அனுமதிக்கப்படாது.
அதே போன்று ஈ.வெ.கி. சம்பத் சாலை, ஜெர்மையா சாலைச் சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலை, கெங்கு ரெட்டி சாலைச் சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
மேலும் பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித்திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று் தங்கள் வழித்தடங்களை அடையலாம் என போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.