ஆவடி: போர் டாங்கிகளின் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரித்த 4 இந்திய நிறுவனங்களை, ஏவிஎன்எல் அமைப்பு நேற்று பாராட்டி கவுரவித்தது.
போர் டாங்கிகள் உள்ளிட்டவை தயாரிக்கும் ஏவிஎன்எல் (Armoured Vehicles Nigam Limited) நிறுவனம், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இதன்கீழ் செயல்படும் நிறுவனங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர், டிகான்டமினேஷன் செட், லிங்க் லோடிங் மெஷின் அசெம்பிளி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆகிய 4 உதிரி பாகங்கள் மூலம் டி-90 மற்றும் பிஎம்பி போர் டாங்கிகளை உருவாக்கி வருகின்றன.
இந்நிலையில் வெற்றிகரமாக உள்நாட்டிலேயே போர் டாங்கிகளின் 4 உதிரி பாகங்களை தயாரித்த சென்னை லூகாஸ் டிவிஎஸ், குவாலியர் எச்எம்ஐ, நாக்பூர் சந்தீப் மெட்டல் கிராஃப்ட் பிரைவேட் லிமிடெட், கான்பூர் எம்ஜி டெக்னிக்கல்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்களை பாராட்டி கவுரவிக்கும் விழா நேற்று ஆவடியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஏவிஎன்எல் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ஏ.என்.வஸ்தவா, போர் டாங்கி உதிரி பாகங்களை தயாரித்த லூகாஸ் டிவிஎஸ் உள்ளிட்ட 4 இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளை பாராட்டி கவுரவித்தார்.
மேலும், ஏவிஎன்எல், பாதுகாப்புத் துறையில் தன்னம்பிக்கையை உறுதி செய்வதற்காக ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின்கீழ் போர் டாங்கிகளின் 31 உதிரிபாகங்களை சுதேசிமயமாக்குவதற்காக திட்டமிட்டுள்ளது. இது,கடந்த 6 ஆண்டுகளின் இறக்குமதியைக் கருத்தில் கொண்டு ஆண்டு செலவினமான ரூ.200 கோடியை மிச்சப்படுத்தும் எனஏவிஎன்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.