சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த மருத்துவமனையில் 46 வயது ஆண் மற்றும் 19 வயது பெண் நோயாளிகள் கல்லீரல் செயலிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தனர். கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்பதால், மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில், சாலை விபத்தில் சிக்கி சேலம் மோகன்குமார மங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25 வயது ஆண் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். தானமாகப் பெறப்பட்ட அவரது கல்லீரல் 108 ஆம்புலன்ஸ் மூலம் போக்குவரத்து காவல் துறை உதவியுடன் 6 மணி நேரத்தில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
இதேபோல, சாலை விபத்தில் சிக்கி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 26 வயது ஆண் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது கல்லீரலும் தானமாகப் பெறப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் ஜெஸ்வந்த் தலைமையில், மருத்துவர்கள் மாலா, செல்வராஜ் மற்றும் ரேலாஇன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், இந்த இரண்டு கல்லீரலையும் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 46 வயது ஆண் மற்றும் 19 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பொருத்தினர். மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனை டீன் பாலாஜி, மருத்துவர்கள் குழுவினரைப் பாராட்டினார்.
இது தொடர்பாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு இயக்குநர் ஜெஸ்வந்த் கூறும்போது, “அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 87 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. பெண்களைவிட ஆண்களுக்கு கல்லீரல் பாதிப்பு அதிகமாக உள்ளது. சத்துள்ள உணவுகளை உட்கொண்டு, உடற்பயிற்சிகளை செய்தால் கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்க முடியும்” என்றார்.